கடவுள் எங்கே?
இந்த கேள்வி கேட்பதால் நான் எதோ நாத்திகவாதி என்று நினைத்து விடாதீர்கள்.
நினைக்க தோன்றும்.
கொஞ்சம் சற்று நிதானமாக, சுய நினைவோடு, வெறுப்பு விருப்பின்றி, பாகுபாடற்ற பொது நல நோக்கோடு யோசித்து பாருங்கள். கடவுளை மட்டும் அல்ல, கடவுள் பக்தியையும்.
பொங்கல் கொண்டாடும் சந்தோசத்தோடு காலை நாளிதழை திறந்தால் முகத்தில் அடித்தது ஐயப்ப மலையில் நூறு பேர் பலி என்று.
கடும் விரதம் இருந்து, குழந்தைகள் , குடும்பம் என்ற பந்தம் இன்றி சன்யாசி வாழ்க்கை வாழ்ந்து இருதியில் கடவுளை காண வரும் உண்மையான பக்தனுக்கு ஐய்யப்பன் தந்த வரம் - இறப்பு. இறுதி மூச்சு.
வாழ முடியாதவனுக்கு மரணம் ஒரு வரம், ஆனால் அதே நேரத்தில் வாழ கூடாதவனனுக்கு மரணம் ஒரு தண்டனை என்ற ஒரு கூற்று உண்டு.
இந்த கோர விபத்து எந்த வகையில் சேர்த்து.
பிஞ்சு குழந்தைகள் கூட பலியானதாக தகவல். கடவுள், பக்தி விரதம், வரம் போன்றவற்றிற்கு அர்த்தம் புரியும் முன்பே மடிந்து போனதன் மர்மம் என்ன?
தன்னையே கதி என்று நம்பி வந்த பக்தனுக்கு கடவுள் கொடுத்தது வரமா / தண்டனையா?
குற்றம் புரிவோன், இழி தொழில் செய்வோன், மக்கள் பணத்தில் மஞ்சம் கொல்வோன் எல்லாம் கடவுளை நினைக்க நேரம் இல்லாமல் உல்லாசத்தில் ஆனந்தமாய் இருக்கும் போது, தன்னையே நினைத்து வாழும் பக்தன் கண்ட பலன் இதுதானா?
தான் வாழ்நாளில் ஒரு பகுதியை கடவுளுக்காக அர்பணித்து வாழும் இவன் வாழ் நாள் பூராவும் ஏழையாக இருபது தான் இவன் கண்ட பலனோ.
நடை பயணம், மொட்டை போடுதல், சிலம்பு குத்துதல் - எல்லாம் எதுக்கு?
ஏழையாகவே இருக்கவா?
இல்லை இல்லை பணம் பண்ணத்தான்.
ஆனால் பணம் வந்ததா?
உழைத்து முன்னேறிய தொழில் அதிபர்களை கேளுங்கள் - எந்த கடவுள் அள்ளி கொடுத்தார் என்று?
ஊரை ஏமாற்றி சம்பாதிக்கும் கயவர்களை கேளுங்கள் - எந்த கடவுள் கற்று கொடுத்தார் என்று?
உயர் பதவியில் அமர்ந்து ஆட்சி நடத்தும் அதிகார வர்க்கத்தை கேளுங்கள் - எந்த கடவுள் கற்று கொடுத்தார் என்று?
அம்பானி முதல் அரசியல் வாதிகள் வரை, எல்லாரும் சிறப்புற்று இருப்பது அவரவர் செய்த கடும் முயற்சியால் தான், எந்த கடவுளும் இவர்களுக்கு அள்ளி கொடுக்கவும் இல்லை, கற்று கொடுக்கவும் இல்ல.
கூட்டம் கூடி, கோஷம் போட்டு, காவி தரித்து பட்டை இட்டு ஊர் விட்டு ஊர் வந்து ஆன்மீக வியாபாரிகளுக்கு அள்ளி கொடுத்து அரியணை கொடுப்பதை நிறுத்தி விட்டு,
இருக்கும் இடத்திலேயே சிந்தித்து உழைக்க முயலுங்கம்.
கடவுள் உங்கள் கூட இருப்பார்.
உங்கள் உழைப்பு, உழைப்புக்கு துணை நிற்போர் தான் கடவுள்?
நீங்கள் நீங்கலாக இருங்கள்.